மற்றவர்களுக்கு சுதாங்கன்.. எனக்கு ரங்கராஜன். _ திருவேங்கிமலை சரவணன்

......................................................

Posted on :13 September ,2020 14:23:04
News Image

மற்றவர்களுக்கு சுதாங்கன்..    எனக்கு ரங்கராஜன்.                                 _ திருவேங்கிமலை சரவணன் 

www.livetrichy.com 


80 களில் இளைஞர்களைக் கொண்டு இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட வார இதழ் 'திசைகள்'.                                      ஆசிரியர் குழு, நிருபர்கள் குழுவிவ் சிறிய டீன் ஏஜ் கூட்டமே இதை ஆக்கிரமித்து கொண்டு இருந்தது. இதன் ஆசிரியர் திரு.மாலன் சார். துணை ஆசிரியர். ரங்கராஜன். சென்னை அமைந்தகரையில் இருந்த அருண் ஹோட்டல் கீழ் தளத்தில் சாவி அலுவலகத்தில் இயங்கி வந்தது. மாவட்டம் தோறும் இளைஞர்கள் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். அலுவல நிர்வாகத்தை திருமதி.சகுந்தலா ரவி பார்த்துக்கொண்டார். அப்பொழுது மாலன் சாரே இளைஞர் தான். ஒரு ஹீரோ லுக்கில் இருப்பார். இன்றும் அப்படித்தான் இருக்கிறார்.

நான் இதில் திருச்சி மாவட்ட நிருபராகவும், அடிக்கடி அண்ணன் வீட்டிற்கு சென்னைக்கு வரும் போது சென்னையில் முக்கிய பேட்டிகளை எடுத்து கொடுப்பது வழக்கம்.

திசைகள் இளைஞர் வார இதழ் மூலம் நிறைய டீன் ஏஜ் திறமைசாலிகளை கண்டுபிடித்து வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.                  வஸந்த் திரைப்பட இயக்குநர், பட்டுக்கோட்டை பிரபாகர் கதை ஆசிரியர், கார்த்திகா ராஜ்குமார் கதை ஆசிரியர் ஊட்டி, எழுத்தாளர்கள் சுபா, ஓவியர் அரஸ், ஓவியர் கங்கன், ஓவியர் மருது, திருவேங்கிமலை சரவணன், மணா, எஸ்.சந்திரமௌலி, நளினி சாஸ்திரி, புகைப்பட கலைஞர் ஏ.வி.பாஸ்கர், சிவகுமார்(திரு.ஜ.ரா.சுந்தரேசன் அவர்களின் மகன்). கைலாஷ்(இயக்குநர்.கே.பாலசந்தர் அவர்களின் மகன்) இப்படி ஏகப்பட்ட இளைஞர்களின் பட்டாளம். பேட்டி மற்றும் புகைப்படங்களை துணை ஆசிரியர் ரங்கராஜனிடம் தபால் மூலமோ நேரிடியாகவோ கொடுப்பது வழக்கம். எப்ப போனாலும் ரங்கராஜனை ஆபிஸில் சந்திக்கலாம். எப்பொழுது தூங்குவார் என்றே தெரியாது. லேஅவுட்டில் இருந்து அமோனியா போகும் வரை அவர் பார்த்துக் கொண்டு இருப்பார். அதே போல் மாலன் சார். பஜாஜ் ஸ்கூட்டரில் வருவார். அலுவலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும்.

அப்பொழுது  பலர் சொன்னார்கள். இன்னும் 30 வருடங்களுக்கு தமிழ் பத்திரிக்கைத்துறையை இந்த இளைஞர் கூட்டம் தான் ஆட்டிப்படைக்கப் போகிறது என்றார்கள், அதே போல் நடந்தது. திசைகள் கிட்டதட்ட ஒரு லட்சம் பிரதிகளை எட்டும் போது திடீரென்று நிறுத்தப்பட்டது. சாவியின் முன் கோபமும் இதற்கு ஒரு காரணம் என்றார்கள். பிறகு ரங்கராஜன், நான் மற்றும் சிலரை வார்த்தைச்சித்தர் தாய் உள்ளத்தோடு அணைத்துக்கொண்டார். அங்கு கொஞ்ச காலம் பிறகு ரங்கராஜன் குமுதத்தில் எழுத ஆரம்பித்தார்.  ஏற்கனவே நிறைய ரங்கராஜன். திருவரங்கம் ரங்கராஜனை ரா.கி. ரங்கராஜன் சுஜாதாவாக மாற்றினார். இந்த ரங்கராஜனை சுதாங்கனாக மாற்றினார்.

 அதிலிருந்து ரங்கராஜன் என்கிற சுதாங்கனுக்கு சுக்கிர திசைதான். ஒரு  டஜன் ஆர்ட்டிக்கல் எழுதி இருப்பார். ஆனந்த விகடனுக்கு சென்று விட்டார். அங்கிருந்து வெளியாகும் ஜுனியர் விகடனுக்கு பொறுப்பாசிரியர் ஆகிவிட்டார். நான் அவரை தொடர்ந்து குமுதத்தில் ப்ரீலேன்ஸ் ஜர்னலிஸ்டாக எழுத ஆரம்பித்தேன். சுதாங்கன் என்கிற யானை பசிக்கு கரும்பு காடாக ஜூனியர் விகடன் அமைந்தது. அப்புறம் என்ன ஜெட் வேகம் தான். மதன் சாரும், ராவ் சாரும் சுதாங்கனுக்கு நல்ல அரவணைப்பாக இருந்தனர்.

அடிக்கடி நந்தனம் YMCA உடற்பயிற்சி மைதானத்திற்கு அவர் மகனை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்து வருவார். நாங்கள் இருவரும் வாக்கிங் செல்வோம். கொள்கை, கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை மீறி நல்ல நண்பர்கள். இயக்குநர் மணிவண்ணள் இருவருக்கும் நெருங்கிய நண்பர். சுதாங்கனுக்கு அரசியல் தவிர்த்து தமிழ் திரைப்படம் மற்றும் பாடல்கள் மீது அலாதி ப்ரியம். நல்லா பாடுவார். எந்த படம் பாடல் ஆசிரியர் அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

அவர் வீட்டிற்கு சென்றால் ஏதோ நூலகத்தில் நுழைந்தது போல் ஒரு பிரம்மை. அவ்வளவு புத்தகங்கள் இருக்கும் அனைத்தையும் படித்து இருப்பார். அவரிடம் உள்ள சிறப்பே இது உலகத் தரம் வாய்ந்தது. இந்த புத்தகம் அந்த அளவிற்கு புகழ் பெற்றதல்ல என்று நினைக்க மாட்டார். அதில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும் என்று படிப்பார். அவருடைய நட்பு வட்டாரம் பெரிது. அதை அழகாக மெய்டெய்ன் பண்ணுவார். தன்னை தானே உற்சாகப் படுத்திக்கொள்வதில் அவருக்கு நிகர் அவர் தான்.

மனைவி இறந்து விட்டார். ஒரே மகன் வெளிநாட்டில் படிக்க வைத்து இன்று துபாயில் கைநிறைய சம்பளம். அப்பா நீங்கள் வேலை எதுவும் பார்க்க வேண்டாம் நான் எவ்வளவு பணம் லேண்டுமானாலும் அனுப்புகிறேன் என்ற போது அதை அன்போடு தடுத்து விட்டார். சில மாதங்களுக்கு முன்பு சுதாங்கனை வீட்டில் சென்று பார்த்து பேசிக் கொண்டு இருந்தேன்.

பிரபல தமிழ் தினசரி ஒன்றுக்கு வார மலர் தயாரித்துக் கொண்டு இருந்தார். மாதத்திற்கு நான்கு புத்தகம் அதுவும் அட்வான்ஸ் ஆக அனுப்ப வேண்டும். 

பல புத்தகங்களில் இருந்து குறிப்பு எடுக்கிறார். மேடையில் சினிமா பாடகர் பாட்டு புத்தகத்திற்கு ஸ்டேண்ட் வைத்து புத்தகத்தை பிரித்து வைத்திருப்பார்களே அது போல் சின்ன ஸ்டேண்ட் உட்கார்ந்து பார்த்து படிப்பது போல் இவரே வடிவமைத்து இருக்கிறார். நான் பார்த்து அசந்து விட்டேன். படித்து உள்வாங்கிக் கொண்டு லேப்டாப்பில் அடிக்கிறார். உடனே அடுத்தப் புத்தகம். ஏதோ கம்யூட்டர் மனிதனை போல் வேலை செய்ததைப் பார்த்து பிரமித்து விட்டேன்.

மனைவி இறந்து சில காலம் ஆகிறது. மகன் துபாயில். சுதாங்கனுக்கு தனிமை எந்த துயரையும் கொடுக்கவில்லை. அவ்வளவு பிஸி. ஒன்று எழுதிக் கொண்டு இருப்பார் இல்லா விட்டால் புத்தகங்கள் படித்துக் கொண்டுஇருப்பார். காரில் செல்லும் போது பழைய திரைப்பட பாடல்களை உற்சாகமாக பாடி வருவார். சுறுசுறுப்பு, பரபரப்பு அது தான் சுதாங்கன். மதியம் ஒரு மணி நேரம் தூக்கத்திற்காக நேரம் ஒதுக்குவார். இரவு நேரத்தில் எழுத படிக்க பயனாக இருக்கும் என்பார்.

சுதாங்கனைப் பற்றி இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். நளபாகத்தில் கெட்டிக்காரர். அவர் மாதிரி யாரும் ரசம் வைக்க முடியாது. அதை மட்டும் ஒரு டம்ளரில் வாங்கி குடிக்கலாம். என்னைப் போன்று சுதாங்கன்  வைக்கும் ரசத்திற்கு நிறைய ரசிகர்கள். கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்க மாட்டார் அவ்வளவு சுறுசுறுப்பு.

ஒருவர் பத்திரிக்கையாளராக வர எப்படி இருக்கணும் என்பதை 10 பக்கம் எழுதி விளக்குவதை விட, தம்பி நீ நேரா சுதாங்கனை போய் பார் என்றால் போதும். அவரிடம் இருக்கும் திறமையில் பத்து சதவிகிதம் அந்த இளைஞன் கற்று கொண்டாலே போதும்.  பெரிய மீடியா கிங் ஆகி விடுவான். சின்ன சின்ன தகல்களை எல்லாம் சேகரித்து வைத்து இருப்பார்.

உனக்கு பல முகங்கள் உண்டு. அரசியல், சினிமா, இலக்கியம், நடிப்பு, கதை ஆசிரியர், நாவல் ஆசிரியர், பத்திரிக்கையாளர், மேடை பேச்சாளர். 

உன்னைப் பற்றி பேச பேச இன்னும் மிச்சம் இருக்கு நான் எதை பேசுவது எதை விடுவது.40 ஆண்டு கால நண்பன் சென்று வா நண்பனே ! அதற்கு முன் உன் உற்சாகத்தையும்,  சுறுசுறுப்பையும் என்னிடம் கொடுத்து விட்டு போ! அது எப்போதும் என்னிடம் இருக்கும். உனது உயிர் நண்பர்களை எப்படி நீ ஆறுதல் படுத்தப்போகிறாய். மதன் சார், ராவ் சார், விகடகவி நண்பர்கள். இவர்களையாவது நீ ஆறுதல் படுத்திவிடலாம். உன் உயிர் நண்பன் சுபா வெங்கட்டை எப்படி ஆறுதல் படுத்த போகிறாய். எல்லாவற்றிலும் அவசரப்படுவாய் இதிலுமா ? சென்று வா என் இனிய நண்பனே!                     _ திருவேங்கிமலை சரவணன்.

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் அவர்கள் காலமானதற்கு அவரது நெருங்கிய நண்பர், மூத்த பத்திரிக்கையாளர், திருச்சி திருவேங்கிமலை சரவணன் அவர்கள் வெளியிட்ட நினைவஞ்சலி.

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் அவர்கள் மறைவுக்கு www.livetrichy.com தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>