தென் திருப்பதி என பக்தர்கள் வணங்கும் துறையூர் பெருமாள் மலை ஸ்தல வரலாறு

......................................................

Posted on :04 October ,2019 23:29:57
News Image

தென் திருப்பதி என பக்தர்கள் வணங்கும் துறையூர் பெருமாள் மலை ஸ்தல வரலாறு 

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை பெயர் சொன்னதுமே தெரிந்துவிடும். இந்த மலை, பெருமாளுக்கான மலை. பெருமாள் பக்தர்களுக்கான மலை என்று ! ஆமாம்... இங்கே... இந்த அழகிய மலையில் குடிகொண்டு சேவை சாதிக்கிறார் பெருமாள். இந்தத் தலத்தில் இவரின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி.

புராண காலத்தில் காவிரிக்கு வடக்கே உள்ள இந்த பூமி, தீர்த்தபுரி எனப் போற்றப்பட்டது. அதேபோல் வேணு வனம் என்றும் ஜமீன் துறையூர் என்றும் அழைக்கப்பட்டது. திருச்சியில் இருந்து  45 கி.மீ. தொலைவிலும், பெரம்பலூரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது துறையூர் - பெருமாள்மலை திருத்தலம்!

இம்மலையில்... ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, கிழக்குப் பார்த்தபடி அருள் பாலிக்கிறார் பெருமாள். இவரைத் தரிசித்தால் நம் வாழ்வில் விடியல் நிச்சயம் என்று சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.

ஓங்கி உயர்ந்த மலையின் அடிவாரத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள்  சுவாமியின் சந்நிதி. இவரை வணங்கி விட்டு, மலையேற வேண்டியதுதான்! முன்பெல்லாம் மலையை நடந்து தான் அடையவேண்டும். இப்போது பக்தர்களின் வருகை அதிகரிக்கவே, மலையில் பாதையிட்டு, கார் முதலான வாகனங்கள் வந்துசெல்லவும் வழிவகைகள் செய்யப்பட்டு விட்டன. மலையேறி வந்து மலையப்பனைத் தரிசித்தால், நம் வாழ்க்கைக்கும் சந்ததிக்கும் பாதை அமைத்துக் கொடுத்தருள்வார் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத பிரசன்ன வேங்கடாசலபதி.

பூமி மட்டத்தில் இருந்து 1,000 அடி உயரத்தில் இருக்கிறது ஆலயம். படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். சுமார் 1,500 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாகனப் பாதையும் உண்டு. வழியே சிறுசிறு குன்றுகளாக இருப்பதையும் பார்க்கலாம். இந்தக் குன்றுகள் மொத்தம் ஏழு. அதாவது ஏழு மலைகளைக் கடந்த பிறகு, ஏழுமலையானின் சிலிர்க்க வைக்கும் தரிசனம் !

திருப்பதி பெருமாள் இங்கே பிரசன்னமானார் என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேதராக ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி காட்சி தருகிறார். திருப்பதி போலவே ஏழு மலைகள் இருக்கின்றன. திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் எனும் ஊர் இருப்பது போல், இங்கே பெருமாள் மலை கிராமத்துக்கு அருகிலும் நாகலாபுரம் அமைந்து உள்ளது. ஆகவே திருப்பதிக்கு நிகரான க்ஷேத்திரம் என்றும் தென் திருப்பதி என்றும் போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

புராணத் தொடர்பு கொண்ட ஆலயம். அதே சமயம் புராதன வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலமும் கூட!

கல்லணையைக் கட்டிய கரிகாற் சோழப் பெருவளத்தானின் பேரன், தன் ஆட்சியில் கட்டிய கோயில் என்கிறது ஸ்தல வரலாறு. தன் ராஜகுருவின் அருளாசிப்படி, சோழ தேசத்துக்கு உட்பட்ட இந்தப் பகுதியில், வேங்கடவனை நினைத்து, தவமிருந்தான் மன்னன். ஓர் இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ய... அதில் மகிழ்ந்த பெருமாள், மன்னனுக்குத் திருக்காட்சி தந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. இப்படி, பக்தனின் முன்னே பிரசன்னமானதால், ஸ்ரீசங்கு சக்ராயுதபாணியாக, திருமணக் கோலத்திலும் திருக்காட்சி தந்ததால், இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி என்றே திருநாமம் அமைந்தது என்பர்.

ஆகவே, இந்தத் தலத்துக்கு எந்தக் குறையுடன் மனக்கிலேசத்துடன் வந்தாலும், வந்து பெருமாளை ஸேவித்தாலும் திரும்பும் போது, அந்தக் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்துவிடுவார் பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்! திருமணக் கோலத்தில் காட்சி தந்தவர் என்பதால், இவரை வணங்கினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். எனவே இவரை கல்யாண பிரசன்ன வேங்கடாசலபதி என்றும் அழைக்கின்றனர் பலன் பெற்ற பக்தர்கள்!

எல்லாப் பெருமாள் கோயிலையும் போல, இங்கேயும் துளசியும் தீர்த்தமும் பிரசாதமாகத் தருவது உண்டு. அதேசமயம், தேங்காய்த் துருவல் பிரசாதமும் வழங்கப்படுகிறது இங்கே! அதேபோல், தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கும் தாயாரின் சந்நிதியில் வழங்கப்படும் குங்குமப் பிரசாதம், ரொம்பவே சக்தி வாய்ந்தது என்று கொண்டாடுகிறார்கள் பெண்கள்!

இதுமட்டுமா? இங்கு உள்ள க்ஷேத்திரபாலகர் விசேஷமானவர். இவரிடம் வைக்கும் பிரார்த்தனையும் ஏராளம். நேர்த்திக்கடனும் தாராளம். இங்கே... இன்னொரு சிறப்பு... பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கும் பெருமாள் கோயில் இது என்கிறார் சந்தானம் பட்டாச்சார்யர்.

பெருமாள் மலை பெருமாளை, தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகள் வந்து அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால், நினைத்த காரியங்களும் தடைப்பட்ட காரியங்களும் இனிய மங்கல காரியங்களும் நடத்தித் தந்தருள்வார் பெருமாள் என்பது ஐதீகம்!

ஸ்ரீபத்மாவதித் தாயார் தனிச்சந்நிதியில் அருளாட்சி நடத்துகிறார். சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார் சக்கரத்தாழ்வார். இங்கே உள்ள தசாவதார சப்த மண்டபம் சிற்ப நுட்பத்துடன், அழகு மிளிரக் காட்சி தருகிறது. ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு அவதாரப் பெருமாள் திருக்காட்சி தருவது சிறப்பு.

எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், இங்கு விஷ்வக்சேனர் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். முக்கியமாக, நரசிம்மரின் திருக்கோலம் நம்மை வியக்கச் செய்யும். நரசிம்மரின் திருமுகமும் நகங்களும் 16 திருக்கரங்களும் அப்படியே தத்ரூபமாகக் காட்சி தந்து சிலிர்க்க வைக்கின்றன. பிரதோஷத்தின் போது, நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது வழிபட்டால், மரண பயத்தை நீக்கியருள்வார் என்கிறார்கள். அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து நரசிம்ம தரிசனம் செய்வதும் தோஷத்தில் இருந்து விலகச் செய்துவிடும். சந்தோஷத்தை மட்டுமே வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

புரட்டாசி வந்துவிட்டால்,  தினமும் உத்ஸவம், விழா, பூஜைகள் என அமர்க்களப்படும். வைகாசி திருவோணமும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் பெருமாள் மலை கிரிவல க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. பெளர்ணமி தோறும் இங்கு வந்து, கிரிவலம் வந்து, பெருமாளை தரிசித்தால், திருவருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வாழ்வில் உயர, உன்னத நிலையை அடைய... பெருமாள் மலைக்கு வருவோம். மலையப்ப சுவாமியை மனதார வேண்டுவோம் !

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>