தீபாவளி நினைவுகள் – மனசுக்குள் மத்தாப்பு _ சதானந்தன்

......................................................

Posted on :26 October ,2019 20:07:58
News Image

தீபாவளி நினைவுகள் – மனசுக்குள் மத்தாப்பு  _  சதானந்தன் 

மென்மையான தூறலுடன் ஞாபகங்கள் தாலாட்டும் தீபாவளி, மனதில் என்றென்றும் இனிப்புகளாய் ( ஒ இனிமையாய் ) ,

மனிதர்களை இணைக்க கூடிய, உணர்வு குவியல்களாய், பாச பெரு மழையை மெலிதான தூறல்களாய், பன்னீர் சாமரமாய் வீசி செல்லும், நினைவடுக்குகளில் எப்போதும் மன அதிர்வுகளை நீடிக்க செய்யும் தித்திப்பு குறையாத  பண்டிகை எங்களுக்கு அணுக்கமானது .

இந்தியாவின் ஐந்தாண்டு திட்டம் போல அப்பெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னமே மனசு தயாராகிடும். எப்ப , எது பேசினாலும் தீபாவளி பத்தி தான்.

பலகாரங்கள், டிரெஸ், பட்டாசு, சினிமா அப்படின்னு நிறைய         படம் ஓடும்.  கற்பனைகளில் தக்கையாய் மனசு மிதக்க தொடங்கும். அந்த நாளை நோக்கிய மனவோட்டம் ஒளிக்குவியலை நாடும் பூச்சிகளாய் .

முதலில் பலகாரங்கள், அதெல்லாம் ஒரு பெரிய பிராஜெக்ட். அப்பெல்லாம் அதிகமாக உருவாக்கப்படும் பலகாரங்கள் என்றால் முறுக்கு, அதிரசம், நெய் ரொட்டி, லட்டு, மைசூர் பாகு, மிக்சர் , காரா பூந்தி இவை தான். அதிக பட்சம் எல்லாமே அரிசி மாவு, கடலை மாவுக்குள் அடக்கம், ஆனால் சரியாக அரைக்கலேன்னா நாம அடக்கம் தான். அப்பெல்லாம் டெர்ரர் மம்மிஸ் தான், குறிப்பிட்ட மாவு மில்லில் தான் அரைக்க வேண்டும், அது இல்லாம அரைப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. இந்த சதி வலையில் மட்டும் சிக்க கூடாது. கண்ணி வெடியில் சிக்கி சின்னாபின்னமாக கூடாது. ஆசை காட்டி கூப்பிடுவாங்க. ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கணும் , இல்லேன்னா பின்னாடி பலகாரங்கள் சிதைந்து போனால் கம்பெனி பொறுப்பாகாது, பழியை நாமே சுமக்கனும்.

பத்து நாளைக்கு முன்னேயே ஆயத்தங்கள் தொடங்கி விடும். எல்லா களேபரங்களும் முடிஞ்சு பலகாரம் சுடறது சாமான்யமானது இல்லை, டெபனைட்லி, டெபனைட்லி. முக்கியமா யார் கண்ணும் படாம சுடனும், புதுசு புதுசா முண்டக்கண்ணிகள் முளைப்பாங்க, எல்லாம் விதி தான். அம்மா வீட்டின் பின் புறம் தான் சுடும். ஏன்னா எதிரிங்க நடமாட்டம் முன் பக்கம் அதிகம். முன் கதவை சாத்தி, அதன் பிறகு பெரிய தேக்கு கதவை சாத்தி , அப்புறம் மூணு கதவை சாத்தி, பாது காப்போடு தான் சுடும். அப்படி இருந்தும் ஆகாசவாணியில் சொன்ன மாதிரி எதிரிகள் காலிங் பெல் அடிப்பாங்க. வீட்டில் ஒரு காலிங் பெல் இருக்கும், கதவு பெரிசா இருந்தா கேட்காதுன்னு ஒரு எலெக்ட்ரிசியன் புண்ணியவான் ஐந்தாறு தெருவையும் அலெர்ட் ஆக்கி விடும் பெல் வைத்து விட்டு மறைந்து விட்டார். அன்னைக்கிங்க பாருங்க பத்து முறையாவது அடிப்பாங்க. அம்மா உரு மாறிப்போன, ஆதி நிலை அடைந்த பலகாரங்களுக்கெல்லாம் முன் ஜாமீன் வாங்கி விடும். எங்கள் நிலை தான் பரிதாபம் எத்தனை நாள் ஆனாலும், பொங்கலே வந்தாலும் தின்று தீர்க்க வேண்டும். அம்மா சுடும் பலகாரங்கள் நன்றாகவே இருக்கும், நெய் ரொட்டின்னு பயப்படாதீங்க அதில் நெய் அபூர்வம், அதுபேரு சூஸ்பரி( ஈஸ்வரி இல்லைங்க ), மாவை பிசைந்து அச்சில் இட்டு, மேலே கேசரி பௌடரில் ஒரு பொட்டு வைத்து ஓவென் மாதிரி இருக்கும் இரும்பு பெட்டிக்குள் வைத்து சுட வைப்பார்கள். மெலிதான விரிசலுடன் பொறு பொறுவென்று வந்தால் முன் ஜென்ம புண்ணியம். இல்லையென்றால் ஊழ்வினை பயன் தான் .

அப்படி ஒரு முறை சிதைந்து உரு மாறி போன பலகாரத்தை, ஒரு பையனிடம் எக்ஸ்சேஞ் செய்ய பெரிய ப்ளான் பண்ணினால், அந்த மூதேவி என்னை போலவே பேப்பரில் இரண்டு முறை மடித்து வரவும் நானும் நம்பி வாங்கிட்டேன், மாலை வந்ததும் பிரித்தால் நான் கொடுத்ததாவது பரவாயில்லை உருமாற்றம், நிற மாற்றம், சுவை மாற்றம் தான் (அதுக்கு மேல என்ன இருக்கு அப்படிங்கறீங்களா ), மூலப்பொருளுக்கும் முந்தைய நிலையில் கொடுத்து என்னை முக்தி அடைய செய்து விட்டான். பயங்கரமா கண் பட்டுருக்கும் போல.  இதுல வேற அவங்க அம்மா திட்டுச்சாம் , தீபாவளிக்கு வச்சு படைக்காம எடுக்க கூடாதுன்னு. 

என்னது டிரெஸ்ஸா வரேன். ஏன் அவசரம் , அப்பெல்லாம் பெரும்பாலும் துணி எடுத்து டைலரிடம் தான் தைப்போம், ரெங்க விலாஸ் கடை இருக்கும் , இல்லேன்னா அப்பாக்கு தெரிஞ்ச கடைகள் இருக்கும். அங்க போய் எல்லாத்துக்கும் துணி எடுப்பாங்க, அதுக்கு முன்னரே ஆஸ்தான டைலரிடம் அளவெடுத்து எவ்வளவு வேணும் னு குறிச்சிகிட்டு போகணும்,  கடைக்கு போனா அதை விட கொஞ்சம் கூட தான் எடுப்பாங்க, எல்லாரு பேசற ஒரே டைலாக். வளர்ற புள்ளை கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்னு, அளவெல்லாம் எங்களுக்கு இருக்காது, நாங்களும் தேமேன்னு நிற்போம்.

ஆண் , பெண் எல்லோருக்கும் ஒரே டைலர் தான், அருந்தி அப்படின்னு ஒரு டைலர் இருப்பார். ஒரு கண் பாதிப்போடு இருக்கும். ஆனால் நுணுக்கமாய் தைப்பார். நல்ல மனிதர், பின்னாளில் மேட்டுப்பாளையத்திலிருந்து ராமசாமின்னு ஒரு டைலர் இங்கு வந்தார், அவரிடமும் தைப்போம். தைக்கும் இடம் சுற்றி துணிகளாய் இருக்கும், மீதமான துணிகள் வானவில்லாய் இன்னும் மனதில் சுகந்தமாய்,

தீபாவளி வரை அந்த பக்கமாய் அடிக்கடி போய் வருவோம், அப்படியாவது துணி சீக்கிரம் தைப்பாங்கனு, ஆனால் விதியின் நர்த்தனம் வேறு, தீபாவளி அன்னைக்கு முதல் நாள் ராத்திரி நமக்கு சிவராத்திரி தான், மெலிதான மழை தூறலில் காத்திருந்து வாங்கி வருவோம், பிரசவம் மாதிரி தான். நிறைய பேருக்கு அப்படி தான் இருக்கும், நினைவு தெரிஞ்சு ரெடிமேட் கடைனா அது ஜெயலக்ஷ்மி ஸ்டோர்ஸ் தான்.

 அப்பெல்லாம் மெஹந்தி கிடையாது. மருதாணி தான், ஆட்டு உரலில் போட்டு சரியான் படி அரைத்து,  பெருங் கதைகள் பேசி, சிவக்கும் ஆசையுடன் வைத்து, அப்படியே தூங்கி போய், படுக்கையில் தடவி, பின் கழுவி சிவந்த கதை வார்த்தைகளில் எப்படி, ஓவியமாய் மனதில், 

உடைக்கு தேவையான அணிகலன்கள் வாங்க ஒரு கூட்டம் செட்டு செட்டாய், பெண்கள் கோலம் போடறது அது ஒரு பக்கம், 

வாழ்த்து அட்டைகள் பொங்கலுக்கு தான் அதிகமென்றாலும், தீபாவளிக்கும் நிறைய வாங்கி அனுப்புவோம். தபால்காரர் நம் வீட்டில் வந்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் எவ்வளவு அன்பை தாங்கி வந்திருக்கும். 

பட்டாசு எல்லாம் அப்ப சித்தப்பா தான்  வாங்கி கொடுப்பார், அத்தை பையன் செல்வம் மட்டும் தான் உடன் செல்வான் வாங்க. அவனை நல்ல சோப்பு போட்டு வச்சிருப்போம், சில நூறுகளில் பெரிய பெட்டிகளில் நாலைஞ்சு குடும்பத்துக்கு ஆகற மாதிரி பட்டாசுகள் இருக்கும். பசங்க வெடிக்கறது தனி, பெண் பிள்ளைகள் வெடிக்கறது தனினு   பிரிச்சுக்குவோம், எல்லை தாண்டி வெடிக்கரவங்களும் உண்டு. மன அதிர்வுகள் நிறைய இருக்கும், ஒரு வழியா பிரிச்சு எடுத்துகறதுக்குள்ள பாக பிரிவினை எல்லாம் சாதாரணம். 

ஊசி வெடி , ஓலை வெடி , தம்மம்பட்டி வெடி, லட்சுமி வெடி, சரஸ்வதி வெடி, சாக்லேட் பாம், அணு குண்டு, ராக்கெட், ஒத்தை வெடி , காங்கிரஸ் வெடி, குருவி வெடி, பாம்பு மாத்திரை, ஜில் ஜில்,  கலசம், சங்கு சக்கரம், சாட்டை, பென்சில், கம்பி மத்தாப்பு , மத்தாப்பு, தீப்பெட்டி, பொட்டு கேப், ரோல் கேப், துப்பாக்கி,  வெங்காய வெடி, ஏரோப்லேன், வாளியில  தண்ணிக்குள்ள வைக்கிற வெடி, ரயில் வெடி அப்படின்னு நிறைய இருக்கும் .

வெங்காய வெடின்னு ஒன்று இருக்கும், அதை மறைச்சு எடுத்து வந்து தரையில, சுவத்தில அடிச்சு வெடிப்பாங்க, பெரும் சத்தத்துடன் அதிர்வுடன் வெடிக்கும். லட்சுமி வெடி நிறைய பேப்பர் குப்பையை தரும், அதை வச்சு தான் அதிகம் வெடிச்சவங்க பத்தி பேசுவோம்.

புஸ்வானமாகி போன அத்தனையையும் பொறுக்கி பிரிச்சு மருந்தெல்லாம் கொட்டி பத்த வச்சா புஷுனு சீறிக்கிட்டு மத்தாப்பாய் மலரும், வெடிக்கு தப்பினவங்க கூட இந்த ஆக சிறந்த பரிசோதனையில் சிக்கி தீக்காயம் ஏற்பட்டதுண்டு.

வெடிகள் வைக்கிறதுக்குனே பெரிய ஊது பத்தி விற்கும். ராக்கெட்டெல்லாம் பாட்டிலில் வைக்கிறதுக்கு பதில் தரையில படுக்க வச்சு கோபி வீட்டுக்கு பக்கத்துல சாவடிக்கிட்ட இருந்து விடுவோம், கன்னாபின்னாவென்று போகும். ஏரோப்லேன் என்று ஒன்று இருக்கும், இரும்பில் வட்ட வடிவில் வெய்ட்டாக இருக்கும், சீறிக்கிட்டு மேலே போகும், பொதுவா மைதானத்தில் தான் விடுவோம், ஒரு கையில் அதையும், மறு கையில் ஊது பத்தியையும் வைத்து கொண்டு சென்று விளக்கில் வீட்டிற்குள் ஊதுபத்திக்கு பதில் ஏதோ ஞாபகத்தில் ஏரோபிலேனை பத்த வைத்து விட்டேன். பயங்கரமா சவுண்டுடன் சீறிக்கொண்டு புறப்பட்டு, அப்புறம் என்ன எனக்கு மறக்க முடியாத தீபாவளி தான் !

மழை தூறி கொண்டே இருக்கும். மனம் மாறி கொண்டே இருக்கும், கனவுகளின் அடர்த்தியால் தூக்கம் வராது. காலையில்ய எழுந்து கிழக்கு பார்த்து உட்கார்ந்து எண்ணெய் தேய்த்து குளித்து, சாமிக்கு துணி வச்சு படைச்சு வாங்கற வரைக்கும் படபடப்பாவே இருக்கும்.

புது சட்டை போட்டு கொண்டு வெடியெல்லாம் எடுத்துக்கொண்டு பள்ளி மைதானத்திற்கு வந்து விடுவோம். அங்கே பெண்கள் எல்லாம் வாத நாராயண மரங்களின் கிளைகளில் ஊஞ்சல்(தூரி) கட்டி விளையாடிக்கிட்டு இருப்பாங்க, எல்லோரும் புது துணி உடுத்தி, கவலைகளை  மறந்து பறவை போல மேலே சென்று வருவது எவ்வளவு மகிழ்ச்சி வெளிப்பாடு, மனதெல்லாம் பூரிப்பு.

அப்புறம் கும்பலாய் நண்பர்களோடு சினிமாவிற்கு, பயங்கர கும்பலாய் இருக்கும், ஒரு காட்சிக்கு டிக்கட் கிடைக்கலேன்னா அடுத்தடுத்த காட்சிகளுக்கு முயற்சி செய்வோம். பழைய கொட்டாய்னா அது பிரசன்னா தியேட்டர், புதுசுனா அது பாரதி தியேட்டர், பின்னாளில் லட்சுமி தியேட்டரும் வந்தது, எங்களுக்கான ஒரே பொழுது போக்கு அது தான். அப்ப டிவி னா தூர்தர்ஷன் மட்டும் தான்.

எத்தனை பேர் வந்தாலும் பலகாரங்களும், துணிகளும், உணவுகளும் பரிமாறப்படும். அதுக்குனே எத்தனை பேர் வருவாங்க, அவர்களின் மன நிறைவு நம் வாழ்வியலின் நீட்சி.

எத்தனை உறவுகள், சிநேகங்கள் சேரும், எல்லாம் மகிழ்ச்சியின் ஊற்றாய் பொங்கி வழியும், முடிந்தும் அந்த நினைவுகளின் எச்சங்கள் மிச்சங்களாய் எவ்வளவு நாட்கள் நீடித்திருக்கும், காலம் மாறுகிறது , எங்களை எல்லாம் மீண்டும் கால யந்திரம் சுழற்றி , மனதின் அந்தகாரம் அகற்றி  அந்த நினைவுகளை நனவாக்க வழி பிறக்குமா? மனசுக்குள் மீண்டும் மத்தாப்பு மழை பொழியுமா?!

www.livetrichy.com சொந்த ஊரே சொர்க்கம் பகுதியில்...               திருச்சி மாவட்டம் துறையூரில் 1970 களில் பிறந்த சதானந்தன் அவர்கள் தனது சிறு வயது தீபாவளி நினைவுகள் குறித்து எழுதியுள்ளார். இவர் எனக்கு பிடித்த திருச்சி பகுதியில் எழுதிய பெருமாள் மலை உணர்வின் மறு உருவம் வாசகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 

இது போல உங்கள் நினைவுகளை எழுத்துக்களாக வார்த்து service.livetrichy@gmail.com இமெயிலுக்கு அனுப்பி வைங்க. 

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>